தமிழ்நாடு

புதிய தலைமுறை கள ஆய்வு: வெளிச்சத்திற்கு வந்தது லாட்டரி சீட்டு விற்பனை

புதிய தலைமுறை கள ஆய்வு: வெளிச்சத்திற்கு வந்தது லாட்டரி சீட்டு விற்பனை

webteam

தமிழகத்தில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை கொடி கட்டி பறப்பது, புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ள போதும், வெவ்வேறு ரூபங்களில் அதன் விற்பனை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதற்கு உதாரணமாக, கோவை பேரூர் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பிரதான சாலையில் இருந்து பிரிந்து செல்லும் ஒரு சிறிய பாதையில், தகரத்தால் செய்யப்பட்ட அறையில் குலுக்கல் லாட்டரி சீட்டுக்கான தொகை வசூலிக்கப்படுகிறது. பின்னர், ஒ‌ரு‌ துண்டுச் சீட்டில் மூன்று எண்களும், தேதியும் எழுதப்படுவதுடன், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட லாட்டரி சீட்டின் குறியீடும் குறித்து இதில் குறிப்பிடப்படுகிறது. இதனை வாங்க தொழிலாளர்களும், அன்றாடம் கூலி வேலை செய்பவர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

பிற்பகல் மூன்று மணி அளவில் நடைபெறும் இந்த குலுக்கலில் வெற்றி பெற்றவர்கள் முகத்தில் மகிழ்ச்சி உடனும், வாங்கிய கூலியை இதில் செலவிட்ட வெற்றி பெறாதவர்கள் ஏமாற்றத்துடனும் திரும்பி செல்கின்றனர். இந்த ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் காவல் நிலையம் இருந்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கூலி வேலை செய்வோரிடம் பணம் சுரண்டும் கும்பலை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.