புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, 2017-ல் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை ஆணையத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது. அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி, உள்ளாட்சி வார்டுகள் மறுசீரமைப்பு அறிவிக்கை கடந்தாண்டு அரசிதழில் வெளியானது. அதன்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.
மேலும், மறுசீரமைக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் பட்டியலினத்தவர், பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மே மாதம் அரசிதழில் அறிவிக்கைகள் வெளியானது. இதன் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் தேர்தல் அறிவிக்கை வெளியாக உள்ளது.
மக்களின் நெடுநாள் கோரிக்கையை ஏற்றே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதாகவும், அதற்கும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால், எதிர்க்கட்சித்தலைவர் அரசை குறைசொல்லும் நோக்கில் சந்தேகம் எழுப்பி வருவது வருந்தத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.