தமிழ்நாடு

பொறுப்பேற்ற பின் தலைமைச் செயலாளர், டிஜிபி முதல்வருடன் சந்திப்பு

பொறுப்பேற்ற பின் தலைமைச் செயலாளர், டிஜிபி முதல்வருடன் சந்திப்பு

webteam

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் சண்முகம், மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்‌.

தமிழக அரசின் தலைமைச்செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் பணிக்காலம் நிறைவு பெற்றதையடுத்து, 9 ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனைத்தொடர்ந்து தமிழக அரசின் 46ஆவது தலைமைச் செயலாளராக கே.சண்முகம் பொறுப்பேற்றுக் கொண்டார். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துறையின் செயலாளராக தொடர்ந்து பொறுப்பு வகித்த ஒரே நபர் ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெற்றதால், அடுத்த சட்டம் ஒழுங்கு ‌டிஜிபியாக ஜே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தின் 29ஆவது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றதை தொடர்ந்து டி.கே.ராஜேந்திரன் திரிபாதியிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விடைபெற்றார். இதையடுத்து விடைபெற்ற டி.கே.ராஜேந்திரனுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். 

இந்நிலையில்‌ புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து பேசினர்.