தமிழ்நாடு

17 ஆண்டுகால சிறைவாசம் ! திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்

17 ஆண்டுகால சிறைவாசம் ! திருந்தியவருக்கு உதவிய தூத்துக்குடி கலெக்டர்

Rasus

17 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர் கலெக்டரின் உதவியால் புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார்.

பொதுவாக சிறைக்கு சென்றவர்கள் மீது எப்போதுமே மற்றவர்களுக்கு அதிக நம்பிக்கை இருக்காது. ‘பொய் சொல்வார்கள்’,‘ வம்பு செய்வார்கள்’ என்று சிறைக்கு சென்றவர்கள் பற்றி இந்த சமூகம் ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் கூட மற்றவர்களின் உதவி கிடைக்காமல் அவர்கள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சிறையில் 17 ஆண்டுகள் கழித்தவருக்கு நெல்லை ஆட்சியர் புதிய வழிகாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் மேலவள்ளமடம் பகுதியை சேர்ந்தவர் வேதமணி. 57 வயதான இவர் ஆயுள் தண்டனை பெற்று 17 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். தற்போது அவ்வழக்கில் சிறையிலிருந்து விடுதலையாகி இருக்கிறார். இதனையடுத்து ஏதாவது புதிய தொழில் செய்ய வேண்டும் என நினைத்த வேதமணிக்கு கையில் பணம் ஏதும் இல்லை. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது புதிதாக வேலை தொடங்க லோன் வழங்க உதவ வேண்டும் என வேதமணி ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து புதிய தொழில்முனைவோர் திட்டம் அல்லது பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் லோனுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேதமணிக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து வேதமணியும் லோனுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் ஆட்சியர் அலுவலகத்திற்கே வந்தார் வேதமணி. தன்னுடை சிறைவாசம் உள்ளிட்ட காரணங்களால் லோன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை ஆட்சியரிடம் வேதனையும் கூறியிருக்கிறார் வேதமணி.

இதனையடுத்து வேதமணியின் முந்தைய வாழ்க்கையை அதிகாரிகள் ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது உடல் உழைப்பில் வேதமணி அவ்வளவு கெட்டிக்காரர் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. இருப்பினும் எலக்ட்ரீசியனாக அவர் சிறப்பாகவே இதற்கு முன் பணியாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து கலெக்டர் தன் சுயவிருப்ப நிதியிலிருந்து 1 லட்சம் ஒதுக்கி வேதமணிக்கு உதவினார். இதன்மூலம் வேதமணி தொடங்கிய எலக்ட்ரிக்கல் கடையானது கடந்த 16-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அத்துடன் வேதமணியின் கடைக்கு ரேக் மற்றும் நாற்காலிகளும் இலவசமாக வழங்கப்பட்டது.