தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமைக்கப்படவுள்ள இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம் புலிகளின் வழித்தடத்தில் எந்த வகையிலும் இடையூறு விளைவிக்காது என நியூட்ரினோ திட்டத்தின் திட்ட இயக்குநர் கோபிந்தா மஜூம்தார் விளக்கமளித்துள்ளார்.
நியூட்ரினோ மையம் அமைக்கப்படவுள்ள நிலம் புலிகளின் வழித்தடத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த தகவலை மறுத்துள்ள மஜூம்தார், நியூட்ரினோ திட்டம் புலிகளின் வழித்தடத்தில் இடையூறு விளைவிக்காது எனக் கூறியுள்ளார். இந்த திட்டத்தின் தரைதள கட்டுமானத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லைக்கு வெளியே உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூட்ரினோ ஆய்வு மையம் சுற்றுச்சூழலுக்கோ, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்றும் நியூட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குநர் கோபிந்தா மஜூம்தார் கூறியுள்ளார்.