கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிய அவசியப்படும் நெட் தேர்வில் சமஸ்கிருதம் சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டதால், அதற்கு புரிந்து பதிலளிக்க சிரமப்பட்டதாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
இரு தாள்களாக நடத்தப்படும் நெட் தேர்வில், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் திறனை சோதிக்கும் வகையில் முதல் தாள் அமைக்கப்படும். அதில் டிசம்பர் மாதத் தேர்வுக்கான மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில் பிரத்யக்ஷா, அனுமனா உள்ளிட்ட சமஸ்கிருத தலைப்புகள் சேர்க்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி முதல் ஒரு நாளைக்கு இரு பிரிவுகளாக நடத்தப்படும் நெட் தேர்வில், ஒவ்வொரு பிரிவுக்கும் 1 அல்லது 2 கேள்விகள் சமஸ்கிருதம் சார்ந்து கேட்கப்படுவதாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.
சமஸ்கிருதம் சார்ந்த கேள்விகளுக்கு தயாராவதும், அதனை புரிந்து பதிலளிக்கவும் கடினமாக உள்ளதாக தேர்வெழுதியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் வரும் 6-ஆம் தேதிவரை இணையவழித் தேர்வாக நெட் தேர்வு நடைபெறுகிறது.