நெல்லையில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொள்ள காவல்துறை சார்பில் ‘பஸ் பே’ (BUS BAY) என்ற புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நெல்லை, டவுனில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழக அரசின் இலவச பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள், தினமும் பள்ளி முடிந்து பேருந்தில் செல்கின்றனர். ஆனால் மாணவர்கள் பேருந்தில் ஏறும் போதே ஓட்டுநர் பேருந்தை இயக்குவதாகவும், இதனால் மாணவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் பேருந்தில் மாணவர்கள் ஏற முயலும் போது ஓட்டுநர் பேருந்தை எடுத்ததால் மாணவர்கள் கீழே விழுந்து எழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தலங்களில் பரவியது. இதையடுத்து மாநகர காவல் துறையின் புதிய முயற்சியாக ‘பஸ் பே’ (BUS BAY) என்ற பெயரில் பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இது பேருந்துகள் சாலையின் மத்தியில் நின்று பயணிகளை ஏற்றும்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பேருந்துகள் அனைத்தும் அதற்கான பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் விதமாகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் சாலையில் போடப்பட்டுள்ள தடுப்புகள் தெரியும் வண்ணம் ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய முயற்சி நெல்லையப்பர் சாலை பேருந்து நிறுத்தத்தில் துவங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் பேருந்தில் ஏறுவதற்கு முன்பாகவே பேருந்தை எடுப்பது, பேருந்து நிலையங்களில் பேருந்துகள் நிற்பதில்லை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடிகிறது. இந்த புதிய முயற்சிகளுக்கு மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.