தமிழ்நாடு

நெல்லை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அண்ணாநகர் குடியிருப்பு மக்கள் அவதி!

நெல்லை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அண்ணாநகர் குடியிருப்பு மக்கள் அவதி!

webteam

தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், நெல்லையில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு அணை நிரம்பியதால், உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஓடுவதால், அண்ணாநகர் குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் வீடுகளில் வெள்ளம் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். அண்ணாநகர் பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீடுகளிலிருந்து காலி செய்துவிட்டு உறவினர் வீடுகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்கின்றனர்.

நெல்லை டவுனில் இருந்து மேலப்பாளையம் செல்லும் கருப்பந்துறை அருகே உள்ள தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பாலத்தின் இரு கரைகளிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், குடிநீர் விநியோகம் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட உறை கிணறுகள் மூலம் பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிகப்படியான தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் உறை கிணறுகள் மூழ்கியுள்ளன. மோட்டார்கள் இயங்குவதிலும் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தும் படி வீரவநல்லூர் பேரூராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.