தமிழ்நாடு

காவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கு : 4 பேர் கைது!

காவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கு : 4 பேர் கைது!

webteam

நெல்லையில் மணல் கொள்ளையை தடுக்கச்சென்ற காவலர் ஜெகதீசன் துரை கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு காவலராகப் பணியாற்றி வந்தவர் ஜெகதீசன் துரை. இவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகனுடன் மூலக்கரை பகுதியில் வசித்து வந்தார். மணற்கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வந்த இவர், யாருடனும் சமரசம் செய்து கொள்ளாமல் பணிபுரிந்துள்ளார். 

கடந்த 6ஆம் தேதி நம்பியாற்றில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்கச் 5 பேர் கொண்ட குழுவுடன் தாமும் இணைந்து ஜெகதீசனும் சென்றார். அங்கு சென்றதும் அனைவரும் தனித்தனியாக பிரிந்து சென்று மணல் கொள்ளையர்களை தேடியுள்ளனர். அப்போது மணல் ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்றை மடக்கிய ஜெகதீசனை, இரும்புக்கம்பி மற்றும் பயங்கர ஆயுதங்களால் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஜெகதீசன் பரிதாபமாக உயிரிழந்தார். 

பின்னர் அதிகாலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை விஜயநாராயணம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் குற்றத்தில் ஈடுபட்டதாக தாமரை குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (50,) முருக பெருமாள் (20),  கல்மாணிக்க புரத்தைச் சேர்ந்த மணிகுமார் (24) மற்றும் ராஜா ரவி (25) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்யுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.