தமிழ்நாடு

முன்னாள் மேயர் கொலை: போலீசார் ‘ஸ்கெட்ச்’ போட்டது எப்படி?

முன்னாள் மேயர் கொலை: போலீசார் ‘ஸ்கெட்ச்’ போட்டது எப்படி?

Rasus

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட மூவர் கொலை வழக்கில் பெரிய அளவில் எந்தத் தடயங்களும் சிக்காத நிலையில், போலீசார் தங்களின் அதிதீவிர புத்திசாலிதனத்தால் குற்றவாளிகளை எளிதாக அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இதற்காக அவர்கள் பல்வேறு யுக்திகளையும் கையாண்டுள்ளனர்.

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். பட்டப் பகலில் வீட்டிற்குள்ளேயே நடந்த இந்தச் சம்பவம் சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவர் மத்தியிலும் பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டது. காரணம்; கொலை செய்யப்பட்டவர் முன்னாள் மேயர். அதுவும் ஒரே நேரத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சி. இந்த விவகாரத்தல் உரிய நீதி வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவே, அரசிற்கு மேலும் தலைவலியாக மாறியது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடினாலும், எளிதில் அவர்களை நெருங்க முடியவில்லை. அதற்கு சில காரணங்களும் இருந்தன.

மூவர் கொலை செய்யப்பட்டதும் உமா மகேஸ்வரி வீட்டில் வைத்துதான். அந்தப் பகுதியில் உமா மகேஸ்வரி வீடுதான் பெரிய வீடு என்றாலும் அருகில் எந்தவொரு வீடுகளும் இல்லை. இதனால் கொலை நடக்கும்போது அலறல் சத்தம் கேட்டாலும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இரண்டாவது குற்றவாளிகளுக்கு சாதமாக அமைந்த சம்பவம், வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்பதுதான். இதனை குற்றவாளிகள் சாதமாக்கினாலும் போலீசாருக்கு தலைவலியே ஏற்படுத்தியது.

கொலையோடு நகையும் திருடப்பட்டிருந்தது. இதனால் அரசியல் பிரச்னையில் கொலை நடந்ததா..? இல்லை நகைக்காக கொலை நடந்ததா என்ற இரு தரப்பையும் போலீசார் கவனிக்க வேண்டியிருந்தது.

அடுத்ததாக குற்றவாளிகள் மிகுந்த தந்திரத்தோடு, தடயங்கள் முழுவதையும் அழித்துவிட்டே சென்றிருந்தனர். மற்றொருபுறம், ஒருவகையில் வடமாநில நபர்களின் உதவியோடு நடந்த கொலை போன்றும் போலீசாருக்கு தெரிந்தது. இப்படி அடுத்தடுத்ததாக பல குழப்பங்கள் எழுந்தாலும், போலீசாருக்கு எந்தவொரு தடயங்களும் சிக்காமல்போனது.

உமா மகேஸ்வரியின் கணவருக்கு, குடும்பத்தில் சொத்து பிரச்னையும் இருந்துள்ளது. இதனால் குடும்ப பிரச்னையில் கொலை நடந்ததா..? என்ற சந்தேகமும் எழுந்தது. போதாக்குறைக்கு உமா மகேஸ்வரியின் கணவர் உடம்பில் ஏராளமான கத்திக்குத்துகள். மூவருமே தனித்தனி அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்ததால் எந்த க்ளூவும் போலீசாருக்கு கிடைக்காமல் போனது.

இப்படிப்பட்ட நேரத்தில் தான் போலீசார் தங்களது அதிபுத்திசாலிதனத்தை கையாண்டனர். அதாவது, உமா மகேஸ்வரியின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மூவர் அவசரம் அவசரமாக சாப்பிடாமலேயே திடீரென்று எழும்பி சென்றது அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது. கொலை நடந்த நேரமும், இவர்கள் ஓட்டலை விட்டு கிளம்பி சென்ற நேரமும் ஒன்றாகவே இருந்துள்ளது. இது போலீசாருக்கு ஒரு பொறியை தட்டியது.

அடுத்தது அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஒரு நம்பர் மட்டும் அதிகப்படியான நேரம் பேசிக் கொண்டிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. அடுத்ததாக அப்பகுதியில் நின்ற ஒரு ஸ்கார்பியோ கார். இதனை வைத்தே போலீசார் குற்றவாளிகளை நெருங்கியுள்ளனர். 

அதாவது, ஸ்கார்பியோ கார் ஓனரும், சிக்னல் காட்டிக் கொடுத்த செல்போன் ஓனரும் ஒருவர்தான். இதனைவைத்து குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். எந்தவொரு தடயமும் சிக்காத நிலையில் போலீசார் கடும் சிரமத்திற்கு மத்தியில் வெகு விரைவில் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் சீனியம்மாள் என்பவரின் மகன் கார்த்திகேயனை காவல்துறையினர் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.