தமிழ்நாடு

தேசிய அளவிலான தரவரிசையில் இடம்பிடித்த மனோன்மணியம் பல்கலை

தேசிய அளவிலான தரவரிசையில் இடம்பிடித்த மனோன்மணியம் பல்கலை

webteam

தேசிய தரவரிசை பட்டியலில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 93வது இடம் பிடித்துள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று தெற்கு மாவட்டங்களிலுள்ள மக்களின் நீண்ட கால கல்வியின் தேவைகளை பூர்த்தி செய்ய செப்டம்பர் 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம். பல்கலைக்கழக பட்டியலில் 65,000 மாணவர்கள் உள்ளனர். இதன்கீழ், 61 இணைப்பு கல்லூரிகள், 5 மனோன்மணியம் கல்லூரிகள் மற்றும் 1 சட்டகல்லூரி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு வரை வெளியான தரவரிசைப் பட்டியலில் இப்பல்கலைக்கழகம் இடம் பிடித்ததில்லை. 

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான தரவரிசைப் பட்டியலில் 183வது இடத்தைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டிற்கான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை கடந்த 8ஆம் தேதி வெளியிட்டது. இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 93வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து தற்போதைய துணைவேந்தர் பிச்சுமணி கூறும் பொழுது, “பல்கலைக்கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்பு பாராட்டிற்குரியது. பல்கலைக்கழகத்திற்கு பெருமையை தேடித் தந்துள்ளது. தொடர்ந்து வரும் காலத்தில் இத்தரவரிசை பட்டியலில் முதல் 50 இடத்திற்குள் வருவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.