14 கோடி ரூபாய் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கேரளாவைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் நெல்லை சரக டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த ஷர்மிளா என்ற தொழிலதிபர், இன்று நெல்லை காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், "எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரால் தொடர்ந்து மிரட்டப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அந்த பெண், “நாங்களும் விஜயபாஸ்கர் குடும்பத்தினரும் பல இடங்களில் ஒன்றாக கூடியுள்ளோம். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. மேலும் அவர் என்னுடன் மொபைலில் தகவல் பரிமாற்றம் செய்த ஆவணங்களும் என்னிடம் உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தொழில் ரீதியாக எனக்கு ஏற்பட்ட பாதிப்பின்போது என்னுடைய நகைகளை பத்திரமாக வைப்பதாக கூறி முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரும் அவரது மனைவி ரம்யா விஜயபாஸ்கரும் சேர்ந்து என்னிடம் இருந்து 14 கோடி ரூபாய் வரையிலான பணம் மற்றும் நகைகளை பெற்றுக் கொண்டனர்.
இப்போது அதைக் கேட்டால் திருப்பித் தரவில்லை. ஆனாலும் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருந்ததால் கடந்த 2019 ஆம் ஆண்டு மூன்று கோடி ரூபாய் பணத்தை மட்டும் என்னிடம் கொடுத்து விட்டு என்னை மிரட்டி வீடியோவும் எடுத்துக் கொண்டனர். இந்த பணத்தையும் அவரது நெருங்கிய பழக்கமுள்ள மருத்துவர் மூலமாகத்தான் திருப்பித் தந்தனர். இன்னும் எனக்கு தரவேண்டிய பணம் மற்றும் நகையை திருப்பி தரவேண்டும் என்று கேட்டால் என்மீது பொய் வழக்குகள் போட்டு என்னை தமிழகத்திற்குள் வர விடாமல் செய்கின்றனர்.
இப்போதும் எனது வழக்கறிஞர்கள் திருநெல்வேலியில் இருப்பதால் அவர்களை சந்திக்க செங்கோட்டை வழியாக வந்தால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நெல்லை சரக டிஐஜியிடம் மனு அளித்துள்ளேன். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் என்னுடன் பேசிய ஆவணங்கள் அனைத்தையும் தமிழக டிஜிபியிடம் கொடுக்க உள்ளேன். மேலும் தமிழக முதல்வரையும் தீபாவளிக்கு பிறகு சந்தித்து அமைச்சர் குறித்த புகார் மனு அளிக்க உள்ளேன்” எனத் தெரிவித்தார்.