Over bridge damage pt desk
தமிழ்நாடு

நெல்லை | 7 ஆண்டுகளாக கட்டப்பட்ட மேம்பாலம்.. 5 மாதங்களிலேயே சேதம் - மக்கள் கவலை.. ரயில்வே விளக்கம்!

நெல்லையில் 7 ஆண்டுகளாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம், திறக்கப்பட்ட ஐந்தே மாதங்களில் சேதமடைந்துள்ளதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: மருதுபாண்டி

நெல்லை சிவந்திபட்டி சாலையில், பாளையங்கோட்டை மகராஜ நகர் - தியாகராஜ நகர் இடையே, திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையேயான ரயில்வே பாதை செல்கிறது. இதில், மகராஜ நகர் பகுதியில் ரயில்வே கிராசிங் ஒன்று உள்ளது. காலை, மாலை என முக்கியமான நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படுவதால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் அனைவரும் சிரமமடைந்து வந்தனர். இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

Over bridge damage

இதனையடுத்து, நிதி ஒதுக்கப்பட்டு பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இரண்டையும் இணைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் முடிக்காமல் காலதாமதம் ஏற்பட்டதால் 7 ஆண்டுகளாக பாலம் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், பாலத்தை திறக்கக் கோரி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து, ரயில்வே நிர்வாகம் பாலத்தின் இரண்டு முனைகளையும் இணைக்கும் பணியை கடந்த சில மாமங்களுக்கு முன் தொடங்கிய கடந்த மார்ச் மாதம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

இந்த பாலம் திறந்து ஐந்து மாதங்களே ஆன நிலையில், பாலத்தின் மையப் பகுதியில் தென்னக ரயில்வே பொறியாளர்களால் மதுரை கோட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட இணைப்பு பாலம் பழுதடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாலம் கடுமையாக அதிர்வடைவதாக புகார் தெரிவித்துள்ளனர் பாலம் திறக்கப்பட்ட ஐந்து மாதத்தில் சேதமடைந்து இருப்பது வாகன ஓட்டி மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Over bridge damage

இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில்வே செய்தி தொடர்பாளிடம் கேட்டதற்கு, “பாலம் சேதம் அடைந்திருப்பது குறித்த தகவல் தற்போதுதான் கிடைத்துள்ளது. இருப்பினும் பராமரிப்பு பணியினை மாநில நெடுஞ்சாலை துறை தான் மேற்கொள்ள வேண்டும். இருந்தாலும் எங்களுடைய அதிகாரிகளை விரைவில் அங்கு சென்று ஆய்வு நடத்துவார்கள்” என்று தெரிவித்தார்.