நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளையில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்களுக்கு இணையாக பெண்களும் இளவட்டக்கல் மற்றும் உரலை தூக்கி அசத்தினர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இளவட்டக்கல் விளையாட்டு போட்டியில் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் 40, 60, 90, 119, 140 கிலோ எடையுள்ள இளவட்ட கற்களை தூக்கி வலம் வந்து சாதனை நிகழ்த்தினர்.
இந்நிலையில், ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் 40 கிலோ எடை கொண்ட இளவட்ட கல்லை தூக்கி தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினர். பின்பு உரல் தூக்கும் போட்டி நடைபெற்றது. உரல்களை அதிகமுறை தூக்கிபோட்ட பெண்களுக்கு சிறப்புப்பரிசும் வழங்கப்பட்டது.
மேலும் பல இளைஞர்கள் உரலை ஒருகையால் தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையையும் நிகழ்த்தினர். பெண்கள் உரல் தூக்கும் போட்டியில் முதல் பரிசை ராஜகுமாரியும், இரண்டாம் பரிசை பத்மாவும் பெற்றனர். 140 கிலோ இளவட்ட கல்லை தூக்கி சாதனை படைத்த தங்கராஜ் என்பவருக்கு முதல்பரிசு வழங்கப்பட்டது.