தமிழ்நாடு

கொரோனா கால மகத்துவர்: ஓய்வூதியத் தொகையை அரசின் கொரோனா நிதிக்கு அளித்த மாற்றுத்திறனாளி

நிவேதா ஜெகராஜா

தாய் தந்தையை இழந்ததால், தனக்கு கிடைத்த முதல் மாத ஓய்வூதியத் தொகை 8500 ரூபாயை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியிருக்கின்றார் 90% உடல் ஊனமுற்ற நெல்லையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜா.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கோட்டூரில் வசிக்கும் ராஜா 90 % மாற்றுத்திறனாளி. ராஜாவின் தந்தை அரசு போக்குவரத்து கழக ஓட்டுநராக பணிபுரிந்து வயது முதிர்வு காரணமாக கடந்த 2007 ல் காலமானார். இவரின் தாயாரின் ஓய்வூதிய தொகை கொண்டு குடும்பம் நடந்து வந்த நிலையில் அவரும் இந்த வருடத் தொடக்கத்தில் உயிரிழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம், மாற்றுத்திறனாளியான தனக்கு கருணை அடிப்படையில் ஓய்வூதிய தொகையை வழங்கவேண்டும் என நெல்லை கோட்டாட்சியரிடம் ராஜா மனு வழங்கினார்.

மாற்றுத்திறனாளியான ராஜாவிற்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், "பெற்றோரும் இல்லாததால் மாற்று திறனாளியான நான் மிகவும் சிரமப்படுகிறேன், பெற்றோரின் ஓய்வூதியத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் அவர்களும் தற்போது இல்லாத காரணத்தினால் எந்த ஒரு வருமானமும் இன்றி சிரமப்பட்டு வருகிறேன். என் நிலையை கருத்தில் கொண்டு, கருணை அடிப்படையில் குடும்ப ஓய்வூதியத்தை மாற்றுத்திறனாளியான எனக்கு வழங்க வேண்டும்" என்று மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து இருந்தார் ராஜா.

அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, அவருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார். இதனால் ஓய்வு ஊதியம் மே மாதம் முதல் ராஜாவுக்கு வழங்கப்பட்டது. தான் வைத்த கோரிக்கைக்கு கருணை அடிப்படையில் அரசு செவிசாய்த்த நிலையில், தற்போதைய பெருந்தொற்று காலத்தில், அரசின் பேரிடர் கால தேவைக்காக அரசு தனக்கு வழங்கியுள்ள முதல் மாத ஓய்வு ஊதியத் தொகை 8,500 ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க முடிவு செய்தார் ராஜா.

இன்று அதற்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாளிடம் நேரில் சென்று வழங்கினார். மாற்றுத்திறனாளி, யாருமில்லா ஆதரவற்றவரான ராஜாவின் இந்த கருணை மனதை அறிந்த மக்கள் அனைவரும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் ராஜாவின் தந்தையோடு பணியாற்றிய போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் ஐன் டி யு சி பேரவை பொதுச்செயலாளர் ஆவுடையப்பன், வழக்கறிஞர் பாரதி முருகன்
ஐஎன்டியூசி, போக்குவரத்து துணை தலைவர் எஸ் பி செல்வம் முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.