நெல்லையில் கூட்டுறவு வங்கியில் நிரந்தர கணக்கு வைத்திருந்தவர்களின் பெயரில் போலி கையெழுத்திட்டு கடன் மோசடி செய்யப்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கிளை நல்லூரில் செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் தங்களின் பணத்தை சேமித்து வைத்துள்ளனர். இவ்வாறு கடந்த ஒரு வருடமாக வங்கியில் நிரந்தர வைப்புத் தொகை வைத்திருந்த பூலுடையார் என்பவரின் வைப்புத்தொகை முதிர்வு காலம் அடைந்துள்ளது. இதனால் தனது சேமிப்பு பணத்தை எடுப்பதற்காக அவர் வங்கியை அணுகி இருக்கிறார். ஆனால் அவருடைய கையெழுத்தை போலியாக பதிவு செய்து நிரந்தர வைப்புத் தொகை மீது கடன் தொகை பெற்றுள்ளதாக வங்கியினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று அங்கு நிரந்தர வைப்புத் தொகை வைத்துள்ள பல நபர்களின் வங்கி கணக்குகளில் போலியாக கையப்பமிட்டு பல கோடி அளவுக்கு கடன் முறைகேடு செய்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஆலங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நல்லூர் கிளை மேலாளராக இருந்த சொர்ணராஜ் என்ற செல்வம் மற்றும் செயலாளர்கள் இணைந்து முறைகேடு செய்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
அவர்கள் கையாடல் செய்த தொகையின் மதிப்பு சுமார் 2 கோடி அளவிற்கு இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வங்கி மோசடி நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.