ஹோலி கிராஸ் கல்லூரியின் 101-வது ஆண்டு விழாவில் நிச்சயம் தமிழக முதல்வர் ஸ்டாலினை அழைத்து வந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பேன் என உறுதிமொழி அளித்தார் கே.என். நேரு.
திருச்சி ஹோலி கிராஸ் சிலுவை கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ''நூற்றாண்டு கண்ட கல்லூரி என்ற பெருமையை கொண்டது ஹோலி கிராஸ் கல்லூரி. 50 ஆண்டுகளுக்கு முன்பு இதைச் சுற்றி மூன்று கல்லூரிகள் மட்டுமே இருந்தது. எனக்கு முன் பேசிய முன்னாள் மேயர்கள் சுஜாதா மற்றும் சாருபாலா பணிவு, ஒழுக்கத்தில் சிறந்த கல்லூரி என பேசினர். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் இவர்கள் இருவரும் என்னை மிரட்டி சீட்டு வாங்கினார்கள் என பேசினார். அப்போது, மாணவிகள் விழா அரங்கையே சிரிப்பலையில் அதிர வைத்தனர்.
தொடர்ந்து பேசிய அவர் சிறுபான்மையினர் கல்லூரிகளுக்கு கல்வி வளர்ச்சிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி உறுதுணையாக இருந்தார். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து இருக்கிறார். 1989இல் பெண்களுக்கு சொத்தில் சம பங்கு கொண்டு வந்தார் கருணாநிதி. உள்ளாட்சி பதவிகளில் 33 சதவீதம் பெண்களுக்கு கொடுத்தது திமுக. தற்பொழுது தமிழக முதல்வர் இடைநிற்றல் மாணவிகளுக்காக உதவித் தொகை வழங்கி கல்வியை கொடுத்து வருகிறார்.
கிராமத்தில் பெண்கள் உட்பட அனைவருக்கும் கல்வி அளித்து வரும் இந்த கல்லூரியில் உள்ள அருட்சகோதரிகளை பாராட்ட வேண்டும். என்னுடைய மகளும் இந்த கல்லூரியில் தான் பயின்றார். நடுத்தர மக்களுக்கும், பெண்களுக்கு பாதுகாப்பான சிறந்த இடமாக உள்ளது ஹோலி கிராஸ் கல்லூரி. தொடர்ந்து சிறந்த கல்வியை கொடுத்து உதவி வரும் ஹோலி கிராஸ் கல்லூரி 101வது ஆண்டு விழாவில் நிச்சயம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை அழைத்து வந்து நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பேன் என உறுதிமொழி அளித்தார்.
இதையும் படிக்க: முதன்முறையாக தமிழகத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா! எங்கு? எப்போது?