தமிழ்நாடு

`என் தாய் என்னை கவனிக்கவில்லை... அதான்’- பாழடைந்த வீட்டில் மூதாட்டியை தவிக்கவிட்ட மகன்!

`என் தாய் என்னை கவனிக்கவில்லை... அதான்’- பாழடைந்த வீட்டில் மூதாட்டியை தவிக்கவிட்ட மகன்!

webteam

திங்கள்நகர் அருகே பாழடைந்த வீட்டில் குப்பைகூடங்களுக்கு மத்தியில் ஆதரவின்றி உயிருக்கு போராடிய மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேருந்து நிலையம் அருகே பாடுவான்விளை பகுதியில் ஒரு பாழடைந்த வீட்டில் இருட்டில் குப்பை கூடங்களுக்கு இடையே 80-வயது மூதாட்டி ஒருவர் படுத்த படுக்கையாக உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார். இதை அறிந்த இளைஞர்கள் சிலர் அங்கு சென்று அந்த மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மூதாட்டி அதே பகுதியைச் சேர்ந்த 80-வயதான கித்தேரி அம்மாள் என்பது தெரியவந்தது. 34-வருடங்களுக்கு முன்பு தனது கணவர் செல்லையன் இறந்த நிலையில், வீட்டு வேலைகளுக்குச் சென்று அதில் கிடைக்கும் ஊதியத்தில் தனது ஒரே மகன் செல்வராஜை படிக்க வைத்து திருமணம் செய்தும் வைத்துள்ளார்.

இந்நிலையில், மகன் செல்வராஜ் தாயின் வீடு மற்றும் நிலங்களை பறித்து விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் கிடைத்த பணத்தில் வீடுகட்டி, நல்ல நிலையில் இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இருப்பினும் தனது தாய் கித்தேரி அம்மாளை கைவிட்டு, பாழடைந்த சிமெண்ட் கொட்டகையில் தவிக்க விட்டுச் சென்றிருக்கிறார்.

இதையடுத்து கித்தேரி அம்மாள் கடந்த 5-ஆண்டுகளாக தொருவோரம் கிடக்கும் பிளாஷ்டிக் குப்பைகளை பொறுக்கி விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவருடைய கால்கள் இரண்டும் செயலிழந்த நிலையில், பாழடைந்த வீட்டில் குப்பைகூடங்களுக்கு இடையே முடங்கி உயிருக்கு போராடிய வந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் அவருக்கு உணவளித்து உதவி செய்து வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மகன் செல்வராஜிடம் விசாரணை நடத்தியபோது, “என் தாயே என்னை கொலை செய்ய முற்பட்டார். அதனால் வீடு நிலங்களை விற்பனை செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறேன். என் தாய் எனக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் தான் நானும் அவரை கவனிக்கவில்லை” என பேசியிருக்கிறார். இதையடுத்து அவரை கடுமையாக எச்சரித்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பங்களா வீட்டில் வசிக்கும் மகன் தனது தாயை பாழடைந்த வீட்டில் தவிக்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு அந்நபர் காவல்துறையினரின் ஆலோசனைப்படி செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.