அரியலூர் மாவட்டம், தத்தனூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராணி. இவரது மகள் மஞ்சு அரியலூர் ராமகிருஷ்ணா சி.பி.எஸ்.இ பள்ளியில் படித்தார். பிளஸ் டூ பொதுத்தேர்வில் 299 மதிப்பெண் பெற்றார். தன் அன்பு மகள் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க தனியார் கல்லூரியில் பார்த்த வேலையையும் உதறினார் தாய் மகாராணி.
தினமும் காலையில் 20 கி. மீ. தூரம் பள்ளிக்குச் சென்று மகளை விட்டுவிட்டு அழைத்துவருவது வழக்கம். இந்த நிலையில், நாகை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பிரில்லியன்ட் பள்ளியில் மாணவி மஞ்சு நீட் தேர்வை எழுதியுள்ளார்.மூன்று கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுதாமல் விட்ட மஞ்சு, 680 மதிப்பெண்களை எதிர்ப்பார்த்துள்ளார்.
மகாராணி
நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவருக்கு வெறும் 37 மதிப்பெண்தான் கிடைத்துள்ளது. அதைக் கண்ட அதிர்ந்த மாணவி, "நான் தேர்வு எழுதிய ஒ.எம்.ஆர் சீட் இது இல்லை" என உறுதிபடக் கூறுகிறார். மேலும், தனக்கு ஒரிஜினல் OMR சீட் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மாணவி மஞ்சு
தன்னுடைய நீட் ஓ. எம்.ஆர் சீட்டில் குளறுபடி செய்து பேப்பரை மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டும் மாணவி மஞ்சு, "என்னுடைய இரண்டு ஆண்டு உழைப்பு கேள்விக்குறியாகியுள்ளது. எனக்கு ஒரிஜினல் ஒ.எம்.ஆர் சீட் வேண்டும்" என்றும் கவலையுடன் தெரிவித்தார்.