தமிழ்நாடு

நீட் தேர்வு மைய குளறுபடியும்.. கட்டுப்பாடுகளும்... உண்மையில் நடந்தது என்ன..?

நீட் தேர்வு மைய குளறுபடியும்.. கட்டுப்பாடுகளும்... உண்மையில் நடந்தது என்ன..?

webteam

மனித உயிர்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட கல்வி, மருத்துவக் கல்வி. இதில் மாநில அளவிலும், தனியார் கல்லூரிகளிலும் தனித்தனியாக நடத்தப்பட்ட பல நுழைவுத் தேர்வுகளை ஒன்றிணைத்து ஒரே தேர்வாக்கும் நோக்கில் மத்திய அரசால் கொண்டவரப்பட்டதுதான் நீட் எனப்படும் தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு.

முதலில் நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்தாலும், ஓராண்டில் அவை ஓய்ந்தது. ஆனால் 2005ஆம் ஆண்டு வரை நுழைவுத் தேர்வற்ற மாணவர் சேர்க்கைக்கு பழகிப் போன தமிழகத்திற்கு, சமீபத்தில் பிடிக்காத வார்த்தையாக மாறிப் போனது நீட். மருத்துவப் படிப்பிற்கு வரும் மாணவர்கள் தரமான நுழைவுத் தேர்வுக்குப் பின்னர் அனுமதிக்கப்படுவது அவசியம்தான் எனக் கூறியவர்களையும் சீண்டியது இத்தேர்விற்கு சி.பி.எஸ்.இ விதித்திருக்கும் கட்டுப்பாடுகளும், தேர்வு மையக் குளறுபடிகளுமே. நடந்தது என்ன?

நீட் தேர்வுக் கட்டுப்பாடுகள்

நீட் தேர்வுக்கு சி.பி.எஸ்.இ விதித்திருக்கும் கட்டுப்பாடுகள் நாட்டின் உயரிய அரசு அதிகாரிகளை நியமிக்கும் சிவில் சர்வீஸ் தேர்வுக்குக் கூடக் கிடையாது. தேர்வு மைய வாசலில் தனது அணிகலன்களை கழற்றும் மாணவர்களையும், பிண்ணிய தலையை அவிழ்க்கும் மாணவிகளையும் கண்டு பொருமாத நெஞ்சமில்லை தமிழகத்தில். ஆனால், எந்த அணிகலன்களுக்கும் அனுமதி இல்லை என சி.பி.எஸ்.இ முன்பே அறிவித்துவிட்டது. இணையவழியில் மட்டுமே விண்ணப்ப முறையைக் கடைபிடிக்கும் சி.பி.எஸ்.இ, அந்த இணையதளத்தில் உள்ள தகவல் கையேட்டில், எதுவுமே அணியாமல் தான் வரவேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், துப்பட்டா அணியாமல் வர வேண்டும் என எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத நிலையில், தமிழகத்தின் அத்தனை மையங்களிலும் அனுமதிக்கப்படவில்லை. இஸ்லாமியப் பெண்ணின் தலையில் இருந்த துப்பட்டா உட்பட. சி.பி.எஸ்.இ தனது தகவல் கையேட்டில் மற்றொன்றையும் தெரிவித்திருந்தது. Customary dress அதாவது கலாச்சாரம் சார்ந்த உடைகளை அணிந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே வந்து சோதனைக்கு உட்பட்ட பிறகு செல்லலாம் என்று. சுடிதாருக்கு துப்பட்டா அணிவதும் கலாச்சாரம் சார்ந்த உடையாகவே பார்க்கப்படும் தமிழகத்தில், இந்த விதி மீறப்பட்டிருக்கிறது.

தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க கட்டுப்பாடுகள் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்தக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் தேர்வெழுதும் மனநிலையையே குலைக்கும் விதத்தில் இருக்கக்கூடாதுதானே?

தேர்வு மையக் குளறுபடி

மனிதத் தலையீடுகள் அல்லாத கணினி வழியில் தேர்வு மைய ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுகிறது சி.பி.எஸ்.இ. இதனையும் தனது தகவல் கையேட்டில் தெரிவித்திருக்கிறது. பூ விற்பவரின் மகள் எப்படி இவ்வளவு தூரம் பயணிப்பார் என்பது கணினிக்கு தெரியுமா என்ன? அல்லது இவ்வளவு தூரம் பயணிக்கும் மாணவனின் மனநிலை தேர்வு எழுதக்கூடிய அளவில் இருக்குமா என்பதுதான் கணினிக்கு தெரியுமா? ஆனால், 30 லட்சம் மணவர்கள் தேர்வெழுதக் கூடிய தமிழகத்தில் 10 ஊர்களில் மட்டும் தேர்வு மையம் அமைத்து அதனை கணினியில் உள்ளீடு செய்த சி.பி.எஸ்.இ அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வேண்டாமா?

தேர்வு மைய தகவல்கள் உண்மையில் மாணவர்களுக்கு ஏப்ரல் 16ஆம் தேதியே தெரியப்படுத்தப்பட்டுவிட்டன. ஆனால் குழப்பம் ஏற்பட்டது வேறு இடத்தில். பல மாணவர்கள் வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது குறித்து புலம்பிய சமயத்தில் காளிமுத்து மயிலவன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். அதில் ஏப்ரல் 27ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்திலேயே மையம் ஒதுக்க சி.பி.எஸ்.இ-க்கு உத்தரவிட்டது.

நிம்மதி பெருமூச்சு விட்டு தங்களது தயாரிப்பை தொடர்ந்தனர் மாணவர்கள். ஆனால் சி.பி.எஸ்.இ-யோ உச்சநீதிமன்றத்தில் மே 1ஆம் தேதி தமிழகத்தில் தேர்வு மையம் உருவாக்குவது சாத்தியமில்லை என மேல்முறையீடு செய்துவிட்டது. இதில் முரண் என்னவென்றால், மே 2ஆம் தேதி தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்த தமிழக அமைச்சர்கள் சி.பி.எஸ்.இ-யிடம் பேசி வருகிறோம், தமிழகத்திலேயே மையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன எனக் கூறினர்.

மே 3ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் நேரமிண்மையால் ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களிலேயே தேர்வெழுத வேண்டும் எனக் கூறி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துவிட்டது. அதற்கு பிறகு தான் ரயில்களிலும், பேருந்துகளிலும் டிக்கெட் கிடைக்காமல் அவதிக்குள்ளாகினர் மாணவர்களும், பெற்றோர்களும்.

பயணச் செலவிற்கு பண உதவி செய்யப் பல உதவிக் கரங்கள் நீளவே, இந்த சிக்கல் வெறும் பொருளாதார சிக்கலாகவே பார்க்கப்பட்டது. உடனே, தமிழக அரசும் மாணவருக்கும் உடன் செல்லும் ஒருவருக்கும் பயணச் செலவையும், மாணவர் ஒருவருக்கு ரூ.1000-மும் வழங்க உத்தரவிட்டது. ஆனால், மாணவர்களின் நேர விரயத்தையும், உடல் சோர்வையும், மன சோர்வையும் எப்படி ஈடு செய்ய முடியும்?

இதன் விளைவு, மொழி அறியாத ஊரில் உயிர் காக்கும் படிப்பிற்காக மகன்  தேர்வெழுதுகிறான், வெளியில் தந்தையின் உயிர் பிரிந்தது. இந்த இழப்பை யாராலும் ஈடு செய்துவிட முடியுமா?

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 132% தேர்வு மையங்களை 2015 ஆண்டிலிருந்து அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது சி.பி.எஸ்.இ. நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவ இடங்களுக்கும் நடத்தப்படும் இத்தேர்வுக்கு இந்த மையங்கள் போதவில்லை என்பதை உணர வேண்டி இருக்கிறது. முறைகேடுகளைத் தடுக்க பதின்பருவ மாணவர்களை குற்ற உணர்வுக்கு உள்ளாக்குவதற்கு பதிலாக தகுதியான கண்காணிப்பாளர்களையும், நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையும் அதிகரிக்கலாம். நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகளையும், தேர்வு மைய ஒதுக்கீட்டு முறையையும் சி.பி.எஸ்.இ முன்கூட்டியே அறிவித்துவிட்டோம் எனத் தட்டிக் கழித்துச் செல்லாமல், இதனால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுப்பதே தற்போதையத் தேவை.

கட்டுரையாளர்: அபிநயா.