நாமக்கல்லில் தனியார் நீட் பயிற்சி மையம் மற்றும் பள்ளியில் நடைபெற்று வந்த வருமானவரித்துறை சோதனை 72 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.
நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி போஸ்டல் காலனி பகுதியிலுள்ள கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளதாகவும் வந்த புகார்களை அடுத்து கடந்த 11ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின், நாமக்கல், கரூர், சென்னை, சென்னிமலையிலுள்ள பயிற்சி நிறுவனங்கள், வீடுகள் என 17 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில், நீட் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனையில் 30 கோடி ரூபாய் பணமும், 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. நீட் பயிற்சி மைய தாளாளர், இயக்குநர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் என பலரிடம் கடந்த 72 மணி நேரமாக நடைபெற்று வந்த விசாரணை, சோதனை நிறைவு பெற்றது. மேலும், மாணவர்களிடம் கட்டணமாக பெற்ற தொகை விவரங்கள், வங்கி கணக்கு, சொத்து ஆவணங்கள் போன்றவற்றை அதிகாரிகள் எடுத்துச்சென்றதாக தெரிகிறது.