நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்த நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அறிக்கை அளிக்கிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? என்பது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் மாநில அரசு குழு ஒன்றை அமைத்தது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், இதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த மாதம் 10-ஆம் வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏ.கே.ராஜன் குழு, நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கருத்துகளை பெற்றது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைத்த கருத்துகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கையை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் ஆய்வுப் பணிகள் முடிந்துவிட்டதாகவும், நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மைதான் என்றும் நீதியரசர் ஏ.கே.ராஜன் கூறியுள்ளார். ஆய்வு அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.