தமிழ்நாடு

நீட் வினாத்தாள் விவகாரம் : சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு

நீட் வினாத்தாள் விவகாரம் : சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு

webteam

தமிழ் மொழியில் நீட் தேர்வு வினாத்தாளை மொழிபெயர்த்தவர்கள் தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மொழிப்பெயர்ப்பாளர்கள்தான் என சி.பி.எஸ்.இ தனது மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளது.

தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையெடுத்து சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அதில் மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்கப்பட்டால் குழப்பம் ஏற்படும்.

உதாரணமாக 554 மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு 196 மதிப்பெண்கள் வழங்கப்பட்டால் அவரது மொத்த மதிப்பெண் 750ஆகும். ஆனால் அது நீட் தேர்வின் மொத்த மதிப்பெண்ணான 720ஐ விட அதிகம் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. சிறுத்தைக்கு பதிலாக சீத்தா என்ற மொழிப்பெயர்ப்பில் தவறில்லை எனவும், அதற்கான ஆங்கில வார்த்தை நேரெதிரே வினாத்தாளில் இருக்கும்போது குழப்பம் ஏற்பட்டிருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. 

மேலும், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் வினாக்கள் இருந்தாலும், ஆங்கிலத்தில் உள்ளவையே இறுதியானது என மாணவர்களுக்கு ஏற்கனவே கூறப்பட்டுள்ளது என்றும் சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது. சி.பி.எஸ்.இ தொடுத்துள்ள இந்த மேல்முறையீட்டு மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.