நீட் வினாத்தாளை தமிழில் மொழிபெயர்க்க தமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமிக்கவில்லை என்று அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் கூறியுள்ளார்.
மே 6ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தது. இதனால் தமிழ் மொழியில் தேர்வெழுதிய மாணவர்கள் பாதிப்புக்குள்ளதாக பலர் கூறினர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு, தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. பின்னர், மதுரைக்கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது. அதில் மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்கப்பட்டால் குழப்பம் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘நீட் வினாத்தாளை மொழிபெயர்ப்பு செய்ய தமிழக அரசு நியமித்தவர்களையே பயன்படுத்தினோம். மொழி பெயர்ப்பு தவறாக இருந்ததற்கு மத்திய அரசு பொறுப்பல்ல’ என்று கூறினார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய அதிமுக எம்.பி., விஜிலா சத்யானந்த், ‘நீட் வினாத்தாளை தமிழில் மொழிபெயர்க்க தமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமிக்கவில்லை. தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்பாளர்களை நியமித்ததாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுவது தவறு. சிபிஎஸ்இ தாமாகவே மொழிபெயர்பாளர்களை நியமித்துக் கொண்டது’ என்று கூறினார்.