தமிழ்நாடு

மயானத்திற்குச் செல்ல பாதை வேண்டும்: சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்

மயானத்திற்குச் செல்ல பாதை வேண்டும்: சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்

webteam

ஓட்டப்பிடாரம் அருகே மயானத்திற்குச் செல்ல பாதை கேட்டு மூதாட்டியின் உடலுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேல வேலாயுதபுரத்தில் மயானத்திற்கு செல்லும் பாதையை முனியசாமி என்ற நபர் தனது சொந்த நிலம் என்று கூறி அதை அடைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பாதை அடைபட்டதால், மயானத்திற்குச் செல்ல பாதை அமைத்து தர வேண்டும், ஏற்கனவே பயன்படுத்தி வந்த பாதை அரசு புறம்போக்கு நிலம் என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்தி பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த அழகம்மாள் என்பவர் உயிரிழந்தார். அவரது உடல் எடுத்துச் செல்ல கிராம மக்கள் முயற்சி மேற்கொண்டனர். அப்போது மயானத்திற்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டிருந்ததால், மூதாட்டியின் உடலை பாதையை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக கூறப்படும் நபரின் வீட்டின் அருகே வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து தூத்துக்குடி - புதியம்புத்தூர் ஓட்டப்பிடாரம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்கமான பாதை வழியாக உடலை கொண்டு சொல்லாம், பாதை பிரச்னைக்கு பேசி நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.