தமிழ்நாடு

நிவாரணப் பொருட்களை இலவசமாக ஏற்றி செல்ல வேண்டுமா?

நிவாரணப் பொருட்களை இலவசமாக ஏற்றி செல்ல வேண்டுமா?

webteam

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருவாரூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இலவசமாக நிவாரணப் பொருட்களை ஆம்னி பேருந்துகளில் எடுத்துச்செல்லலாம் என ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

‘கஜா’ புயல் கடந்த 15ஆம் தேதி இரவு நாகை - வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன.

இதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்து போக்குவரத்து மற்றும் மின் இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை சீர் செய்யும் பணியில் பணியாளர்கள் இறங்கியுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இதனிடையே ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை பேருந்துகளில் ஏற்றிச் சென்றால் சுமைக் கூலி வசூலிக்கப்படமாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருவாரூர்,தஞ்சாவூர்,புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இலவசமாக நிவாரணப் பொருட்களை ஆம்னி பேருந்துகளில் எடுத்துச்செல்லலாம் என ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிவாரணப் பொருட்களை ஆம்னி பேருந்துகளில் எடுத்து செல்ல அணுகவேண்டிய முகவரி: 

அனைத்து ஆம்னி உரிமையாளர்கள் சங்கம்,
 F4, மெஜஸ்டிக் காம்ப்ளக்ஸ், 
ஆம்னி பேருந்து நிலையம்,
கோயம்பேடு, சென்னை-107.
 போன்- 81480 45678, 044-42818348.