தமிழ்நாடு

ஆட்சியரைச் சந்திக்க நெடுவாசல் போராட்டக்குழு முடிவு

ஆட்சியரைச் சந்திக்க நெடுவாசல் போராட்டக்குழு முடிவு

webteam

நெடுவாசலில் போராடிவரும் போராட்டக் குழுவினர், மாவட்ட ஆட்சியரை இன்று மீண்டும் சந்திக்க உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் விவசாய நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து அந்தப் பகுதியில் கடந்த 16-ம் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது. கிராம மக்கள், மாணவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெடுவாசலை அடுத்த புல்லான் விடுதியில் போராட்டக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அவரை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகப் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் வேலு தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‌இன்றைய சந்திப்பின் போது மாவட்ட ஆட்சியரிடம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோர இருப்பதாகக் கூறினார். ஆட்சியர், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தால், போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.