தமிழ்நாடு

நெடுவாசலில் 14ஆவது நாளாக தொடரும் போராட்டம்: புதுக்கோட்டையில் முழு அடைப்பு

நெடுவாசலில் 14ஆவது நாளாக தொடரும் போராட்டம்: புதுக்கோட்டையில் முழு அடைப்பு

webteam

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 14 ஆவது நாளாக போராட்டம் நீடித்துவருகிறது.

போராட்டக்களமாக மாறியுள்ள நெடுவாசலுக்கு சாரி சாரியாக வரும் பொதுமக்கள்,பேதங்களை கடந்து விவசாயிகளாக திரண்டு போராடி வருகின்றனர். புதுக்கோட்டையில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் இறங்கி போராடும் இந்த மக்களின் ஒற்றை கோரிக்கை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்பதே. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் எனக் கோரி இளைஞர்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் திரண்டு போராடி வருகின்றனர். போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி செல்ல ஏதுவாக தினமும் ஒரு கிராம மக்கள் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தீர்மானித்து நெடுவாசலின் மேல்பாதி மக்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.

போராட்டம் நடைபெறும் நெடுவாசல் பகுதியில் தொலைத்தொடர்பு கிடைக்காத போது அங்கு நடக்கும் நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் உடனுக்குடன் பதிவேற்றவும் இளைஞர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்றுள்ள வெளியூர்களைச் சேர்ந்தவர்களுக்கு,அந்த கிராம மக்களே தங்கும் இடம்,உணவு உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகின்றனர்.