தமிழ்நாடு

“வேலையை விட்டுச் செல்லுங்கள்”- 700 துப்புரவு பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

“வேலையை விட்டுச் செல்லுங்கள்”- 700 துப்புரவு பணியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ்

EllusamyKarthik

பெருநகர சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வரும் சுமார் 700 பேரை வேலையை விட்டு விலகுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பணியாளர்களிடம் எந்தவித முன்னறிவிப்பும் சொல்லப்படவில்லை எனவும் தெரிகிறது. சுமார் பத்து ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்கள் இந்த அறிவிப்பினால் பணி விலக வேண்டி நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா பொதுமுடக்க காலத்தில் தன்னலம் பார்க்காமல் பொது நலத்தோடு இந்த ஊழியர்கள் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக அண்ணா நகர் மற்றும்  தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ஊழியர்கள் மீது இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தெரிகிறது. மாநகராட்சியின் பணி நீக்க நடவடிக்கையை எதிர்த்து துப்பரவு பணியாளர்கள் சென்னை  மாநகராட்சி  தலைமை  அலுவலகத்தின் முன்பு தங்களது வேலைக்கு உத்தரவாதம் வேண்டி அறவழியில் போராடி வருகின்றனர். 

“எனது கணவர் துப்புரவு பணியாளராக வேலை செய்தார். நான்கு வருட பணிக்கு பிறகு அவர் உயிரிழந்தார். அவரது இடத்தில் நான் பணிக்கு சேர்ந்தேன். ரொம்பவே சிரமப்பட்டு தான் நாள்தோறும் வேலை செய்தேன். குடும்பத்திற்காக இதை செய்தேன். வர்தா புயல், கொரோனா பொதுமுடக்க நாளிலும் வேலை பார்த்துள்ளேன். என்னை பணி நிரந்தரம் செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் தான் இந்த செய்தி எனக்கு வந்துள்ளது” என்கிறார் பாதிக்கப்பட்ட துப்பரவு பணியாளர் சரோஜா. இதுபோன்று பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நன்றி : Times Now மற்றும் ஷபீர் அகமது