தமிழ்நாடு

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 40 சதவித அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் இல்லை ஜாக்டோ ஜியோ குற்றச்சாட்டு

தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 40 சதவித அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குகள் இல்லை ஜாக்டோ ஜியோ குற்றச்சாட்டு

webteam

தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த 40% அரசு பணியாளர்களுக்கு தபால் வாக்குகள் கொடுக்கப்படவில்லை என்று ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ஆம் தேதி நிறைவுப் பெற்றது. இந்தத் தேர்தலில் தமிழநாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து மற்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் 71.90% வாக்குகள் பதிவாகின. இந்தத் தேர்தலுக்கான பணிகளில் 3.5 லட்சம்  தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இவர்களில் 40% பேர் தபால் வாக்குகள் அளிக்கவில்லை என ஜாக்டோ ஜியோ குற்றஞ்சாட்டியுள்ளது.

தேர்தல் விதிகளின்படி, தேர்தல் பணியிலுள்ள அரசு ஊழியர்களுக்கு தங்களின் வாக்குகளை செலுத்துவதற்கு ஏதுவாக தபால் வாக்குகள் போடும் வசதி செய்து தரப்படவேண்டும். இந்தத் தபால் வாக்குகளை அரசு ஊழியர்கள் தாங்கள் பணியிலுள்ள வாக்குச்சாவடியிலோ அல்லது தபால் வாக்குக்கென அமைக்கப்பட்ட சிறப்பு மையத்திலோ வாக்குகளை பதிவு செய்யலாம். ஆனால் இம்முறை அந்த வசதி சரியாக செய்யப்படவில்லை என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரகைக்கு பேட்டியளித்துள்ளனர். அதில்"ஆளும் கட்சியான அதிமுக தங்களை வாக்களிக்கவிடாமல் தடுப்புதற்காகவே தபால் வாக்குகளை சரியாக வழங்கவில்லை என தெரிவித்துள்ளனர். ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான கே. சம்பத் குமார், “நான் வடசென்னை தொகுதியிலுள்ள 293வது வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தேன். என்னுடன் ஐந்து ஊழியர்களும் பணியில் இருந்தனர். எங்கள் 5 பேருக்கும் தபால் வாக்குகள் போடும் வசதி செய்யப்படவில்லை. இதே நிலைதான் சென்னையில் பிற வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கும்” எனத் தெரிவித்தார்.

அதேபோல வடசென்னையின் 59 ஆவது வாக்குச்சாவடியில் தேர்தல் பணியிலிருந்த மற்றோரு ஆசிரியர், “நாங்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டோம் என தெரிந்துதான் எங்களுக்கு தபால் வாக்குகள் வழங்கவில்லை. அத்துடன் தேர்தல் பணியில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் தேர்தல் பணி சான்றிதழும் சரியாக வழங்கப்படவில்லை. நான் இந்தச் சான்றிதழை பெற துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைந்து திரிந்து அதிக சிரமத்துடன் பெரும்படியாக இருந்தது” எனக் கூறினார்.