காஞ்சிபுரம் அருகே 2 டன் கரும்புகளால் செய்யப்பட்ட காளை மாடு உருவங்களை வைத்து வித்தியாசமான வகையில் பொங்கலை கொண்டாடி உள்ளனர்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையின் சிறப்பையும், விவசாயத் தொழிலில் அழிந்து வரும் காளை மாடுகளின் பயன்பாட்டினை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையிலும் காஞ்சிபுரம் அருகேயுள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது வீட்டின் அருகே 2 டன் செங்கரும்பு கட்டுகளால் செய்யப்பட்ட காளை மாடு உருவத்தை வைத்து வித்தியாசமான வகையில் பொங்கலை கொண்டாடினார்.
விவசாயிகளையும், காளை மாடுகளை சிறப்பை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட செங்கரும்பு காளை மாடு உருவங்களை கிராம மக்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சென்றனர்..
நாட்டு மாடுகளின் சிறப்பை இளைய தலைமுறைகள் அறிந்து கொள்ளவும், விவசாயிகளிடையே நாட்டு மாடுகள் இனத்தை பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழர்களின் வீர விளையாட்டில் பங்கு கொள்ளும் காங்கேயம் காளைகளை சிறப்பிக்கும் வகையில் இரண்டு காங்கேயம் காளைகளை சுமார் 1,000 கரும்புகளை கொண்டு காளையின் இயற்கையான தோற்ற அளவுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கரும்பிலான காளைகளை ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஏழு நாட்களாக வடிவமைத்தனர்.
இந்தியாவில் சுமார் 87 வகையான நாட்டு மாடுகள் இருந்தன. தற்போது 35 வரையறுக்கப்பட்ட மாடுகள் மட்டுமே உள்ளது. ஜல்லிக்கட்டு உம்பளச்சேரி, காங்கேயம், புலிக்குளம் ஆலம்பாடி, பர்கூர் ஆகிய காளைகள் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. இவை நான்கும் பழம் பெருமை வாய்ந்தவை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நம் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப பரிமாண வளர்ச்சி அடைந்தவை ஆகும்.