தமிழ்நாடு

அதிநவீன உபகரணங்களுடன் வந்தடைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழு

webteam

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்தனர்.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணி சுர்ஜித் என்ற இரண்டு வயது குழந்தை தவறி விழுந்தது. சுமார் 18 மணி நேரத்திற்கு மேலாக குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் 26 அடி ஆழத்தில் இருந்த குழந்தை பின்னர் 70 அடிக்கு சென்றதால் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. 

அத்துடன், குழாயில் மண் சரிந்து மூடப்பட்டதால் மேலும் சிக்கல் உண்டானது. இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றிவிட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரம் காட்டப்பட்டு வருகின்றது. இதனிடையே, மண் மூடப்பட்டதால் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் குழந்தை சுர்ஜித் அசைவின்றி காணப்படுவது கவலை அளிக்கின்றது.

இந்நிலையில் குழந்தையை மீட்க மாநில பேரிடர் மீட்புப் படை நடுகாட்டுப்பட்டிக்கு வந்துள்ளது. கமாண்டர் பிரேம் ஆனந்த் தலைமையில் 20 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் வந்தனர். 

மாநில பேரிடர் மீட்பு படையை அடுத்து, அதி நவீன உபகரணங்களுடன் 33 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையும் வந்தடைந்தது. இந்த இரு படையினரும் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.