Accused pt desk
தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்| திடீர் திருப்பம்.. என்சிசி அதிகாரி விளக்கத்தால் ஷாக்!

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஐந்தாம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் என்சிசி முகாம் நடந்துள்ளது. இதில் அந்தப் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 13 வயதுடைய மாணவி ஒருவரை என்சிசி பயிற்சியாளரும் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை மாவட்டச் செயலாளருமான சிவராமன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

sex harassment

இந்நிலையில், மாணவி புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நேற்று தனியார் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், பள்ளியின் தாளாளர் சாம்சன் வெஸ்லி, சமூக அறிவியல் ஆசிரியை ஜெனிஃபர், பயிற்சியாளர்கள் சக்திவேல், சிந்து, சத்தியா, சுப்பிரமணி ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து முக்கிய குற்றவாளியான சிவராமனை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்துக்கு உட்பட்ட துரிஞ்சிப்பட்டி அருகே உள்ள பொன்மலைகுட்டை பகுதியில் சிவராமன் பதுங்கி இருப்பதை கண்டறிந்த போலீசார், அவரை சுற்றி வளைத்தனர்.

அப்போது அவர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடியுள்ளார். அப்போது பள்ளத்தில் குதித்ததில் அவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

District collector

இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சிவராமன் உண்மையான என்.சி.சி பயிற்சியாளர் இல்லையென்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், என்சிசி முகாம் தொடர்பாக பள்ளி முறையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும், எந்தெந்த பள்ளிகளில் போலி என்சிசி முகாம்கள் நடந்தது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக என்சிசி தலைமை அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், என்சிசி முகாம் நடத்தி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் என்சிசிக்கு எந்த தொடர்பும் கிடையாது.

என்சிசி விளக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் என்சிசியில் பதிவு செய்த எந்த ஒரு மையமும் பயிற்சி முகாம் நடத்தவில்லை. என்சிசி சார்பிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்தவித பயிற்சி முகாமும் நடத்தவில்லை என தெரிவித்துள்ள என்சிசி தலைமை அலுவலகம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய யாரும் என்சிசி-யில் உறுப்பினர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு பேசுகையில், “மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. என்சிசி முகாம் தொடர்பாக பள்ளி முறையான நடைமுறைகளை பின்பற்றவில்லை; எந்தெந்த பள்ளிகளில் போலி என்சிசி முகாம்கள் நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.