ஜாபர் சாதிக் முகநூல்
தமிழ்நாடு

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஐபோன்களை உடைத்து வீசினாரா ஜாபர் சாதிக்? NCB குற்றப்பத்திரிகையில் தகவல்?

ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக மூன்று பேர் சிக்கிய போது, ஜாபர் சாதிக் தனது இரண்டு ஐ-போன்களையும் உடைத்து வீசியதாக என்.சி.பி குற்றப் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

2000 கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சூடோபெற்றின் என்ற போதைப்பொருளை கடத்தியதாக முகேஷ், முஜிபுர் ரஹ்மான், அசோக் குமார், ஜாபர் சாதிக் மற்றும் சதானந்தம் ஆகிய ஐந்து நபர்களை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜாபர் சாதிக், அமீர்

இந்த வழக்கு தொடர்பாக கடந்த மாதம் 12ஆம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஐந்து பேருக்கு எதிராக டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அந்தக் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக வங்கிக் கணக்கு ஆவணங்கள், தடயவியல் துறை ஆவணங்கள் உள்ளிட்ட மொத்தம் 97 ஆவணங்கள் மற்றும் 42 சாட்சியங்கள் குற்றப் பத்திரிகையில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், டெல்லியில் 50 கிலோ போதைப்பொருள் வழக்கில் மூன்று பேர் கைதான உடனே, ஜாபர் சாதிக் தனது இரண்டு ஐ-போன்களையும் நேப்பியர் பாலம் அருகே உடைத்து தூக்கி வீசியதாகவும் குற்றப் பத்திரிகையில் என்சிபி குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தி இருப்பதாக ஒப்புக்கொண்டதாகவும், வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தல் மூலமாக கிடைக்கும் பணத்தை பீச் ஸ்டேஷனில் உள்ள மணி எக்ஸ்சேஞ்ச் மூலமாக மாற்றி இருப்பதாகவும், அதனை என்சிபி சோதனையிட்டுச் சென்றதாகவும் குற்றப் பத்திரிகையில் தகவல் வெளியாகியுள்ளது.

satha - jafar sadiq

2014ஆம் ஆண்டு முகமது முஸ்தபா என்பவர் மூலமாக ஜாபர் சாதிக்குடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதன் பிறகு அமீர் இயக்கிய இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை ஜாபர் சாதிக் தயாரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று நபர்களுடன் ஜாபர் சாதிக் உரையாடியதாக கைப்பற்றப்பட்ட செல்போன்களை அடிப்படையாக வைத்து ஜாபர் சாதிக்கிடம் என்சிபி அதிகாரிகள் திகார் சிறையில் குரல் மாதிரி பதிவு செய்யப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ஜாபர் சாதிக் மூன்று பேருடன் உரையாடியதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக சோதனையின் முடிவு வந்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.