தமிழ்நாடு

"நோய், நொடியின்றி வாழ இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்" - அரக்கோணம் எம்எல்ஏ ரவி வேண்டுகோள்

"நோய், நொடியின்றி வாழ இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்" - அரக்கோணம் எம்எல்ஏ ரவி வேண்டுகோள்

webteam

மக்கள் நோய், நொடியின்றி வாழ அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என ‘மண் காப்போம்’ இயக்க கருத்தரங்கில் அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி வேண்டுகோள் விடுத்தார்.

ஈஷா அமைப்பின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வது மற்றும் சந்தைப்படுத்துவது குறித்த கருத்தரங்கம் அரக்கோணத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி கலந்துகொண்டார்.

விவசாயிகள் மத்தியில் பேசிய ரவி, “ஆரம்பத்தில் நாம் அனைவரும் இயற்கை விவசாயம் தான் செய்து கொண்டு வந்தோம். இடையில் விளைச்சலை அதிகரிப்பதற்காக ரசாயன விவசாயத்திற்கு மாறினோம். தற்போது மீண்டும் பழைய படி இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். காரணம், ரசாயன உரங்களின் பயன்பாட்டில் தான் B.P, சுகர் போன்ற நோய்கள் வருகின்றன.

எனவே, இது போன்ற நோய், நொடிகளில் இருந்து நம்மை காப்பாற்றி கொள்ள அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். அந்த வகையில், அரக்கோணத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக கருத்தரங்கை நடத்தும் மண் காப்போம் இயக்கத்திற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.