தமிழ்நாடு

தேசியக் கட்சிகளுக்கு இங்கு தலைமை கிடையாது -அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

தேசியக் கட்சிகளுக்கு இங்கு தலைமை கிடையாது -அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

webteam

தேசியக் கட்சிகளுக்கு இங்கு தலைமை கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். 

தேசியக் கட்சிகளுக்கு இங்கு தலைமை கிடையாது. எங்களுடைய (அதிமுக.திமுக) தலைமையின் கீழ் தான் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூ 2 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் புதியக் கட்டிடத்தை அண்மையில் முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இந்தப்புதிய கட்டடத்தின் அலுவலக பணிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து நொச்சிகுளம், புதுக்கோட்டை, அரசங்குளம், ஒட்டுடன்பட்டி ஆகிய கிராமங்களில் செயல்பட இருக்கும் அம்மா நகரும் நியாய விலை கடை சேவையினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு “ சாதரண மக்களின் கனவு நனவாகும் நிலையை மருத்துவ படிப்பின் 7.5 சதவீத இட ஒதுக்கீடு உருவாக்கியுள்ளது. இது வரலாற்றுச்சாதனையாக இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மழை நீர் தேங்கி உள்ள இடங்களில் மழைநீர் அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மூன்றாண்டுக்கு ஒரு முறை திரையரங்குகளுக்கான உரிமம் புதுப்பிக்கும் வகையில் விரைவில் அரசாணை வெளியிடப்பட உள்ளது.

வி.பி.எப். பிரச்சினை தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்றைய தினம் அவர்களுக்குள் முடிவு எட்டப்பட்டது. இனி புதியத் திரைப்படங்களை வெளியிட தடை இல்லை என்ற நிலை வந்துள்ளது. அதிமுக திமுக இரண்டும் மாநில கட்சிகள். ‌எங்களுடைய தலைமையின் கீழ்தான் தேசிய கட்சிகள் இருக்கும். தேசியக் கட்சிகளுக்கு இங்கு தலைமை கிடையாது.

அரசு சார்பில் அமித்ஷாவை உள்துறை அமைச்சர் என்ற நோக்கில்தான் நாங்கள் வரவேற்போம்.அமித்ஷா வருவதால் எதிர் கட்சிகளுக்கு பிரச்சனை என்று பாஜக மாநிலத் தலைவர் கூறுவது அவரது சொந்த கருத்து.” என்றார்.

நாமக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் அமித்ஷா தமிழகம் வருகை மற்றும் கூட்டணி குறித்த கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் “ அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. கூட்டணி பலமாகவே உள்ளது. அரசுமுறை பயணமாக தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அரசு சார்பில் வரவேற்பதோடு தோழமை கட்சி என்ற முறையில் அரசு விழாவிலும் பங்கேற்போம்” எனத் தெரிவித்தார்.