சிறுதானியங்களின் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என்பதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டாகவும் ஐநா அறிவித்திருந்தது. நாடுமுழுவதும் சிறுதானியங்களின் பயன்பாட்டை மக்கள் மத்தியில் அதிகரிக்க வேண்டும் என பல்வேறு முன்னெடுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் தரப்பிலும் முயற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சர்வதேச தினை ஆண்டை முன்னிட்டு பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில் (தன்னாட்சி) தாவரவியல் துறை மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மையம் (ICSSR) இணைந்து இரண்டு நாள் தேசிய அளவிலான சிறுதானிய கருத்தரங்கு மற்றும் மூன்று நாள் சிறுதானிய கண்காட்சி டிசம்பர் 11 முதல் 13 வரை “CELEBRATING MILLETS LEGACY & CONTRIBUTION TO AGRICULTURE- CMLCA- 2023" என்ற தலைப்பில் நடத்தினர். இந்நிகழ்வு இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் நிதியுதவி பெற்று நடைபெற்றது.
உதவி பேராசிரியர் சர்வலிங்கம் நிகழ்வை ஒருங்கிணைக்க, தாவரவியல் துறைத் தலைவர் லோகமாதேவி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் ரே.முத்துக்குமரன் நிகழ்வை தொடங்கி வைத்து தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி முதல்வர் முனைவர் கோ தர்மர் கலந்து கொண்டார்.
இந்த சிறுதானிய கருத்தரங்கிற்கு சிறுதானியத்தில் சிறந்து விளங்கும் எட்டுக்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறுதானியங்கள் பற்றிய விழிப்புணர்வு, அதன் முக்கியத்துவம் மற்றும் சிறுதானிய விளைச்சலை அதிக படுத்தும் முறைகள் போன்றவற்றைத் தெளிவாக கல்லூரி மாணவர்கள் மற்றும் விவசாய பொது மக்களுக்கு சிறந்த முறையில் விளக்கிக் கூறினர்.
இந்த கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இந்திய வரைபடம் மற்றும் தமிழ்நாடு வரைபடங்களை சிறுதானியங்கள் கொண்டு வடிவமைத்து இருந்தனர்.
மாணவி சரண்யா தேவி நிகழ்வு குறித்து கூறுகையில், “இந்த தேசிய சிறுதானிய கருத்தரங்கு மூலம் நாம் எந்த அளவிற்கு ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டு வருகிறோம் என்பது தெரிந்தது. நாமே வீட்டில் சிறுதானியங்களை வைத்து எளிமையான உணவுகளை தயார் செய்து ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் என்பதை இதன் மூலம் தெரிந்துகொண்டோம்” என்றார்.
முதுகலை தாவரவியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி கவிப்ரியா கூறுகையில், “இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மிக உதவியாக இருந்தது. நாங்கள் தாவரவியல் படிப்பதால் சிறுதானியங்கள் பற்றிய அறிமுகம் இருந்தாலும் அவ்வளவாக எங்களுக்கு பரிட்சயம் இல்லை. ஆனால் இந்த கருத்தரங்கு மிக பயனுள்ளதாக இருந்தது” என்றார்
உதவிப் பேராசிரியர் ராஜலட்சுமி கூறுகையில், “இந்தாண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளார்கள். புரதாண காலத்திலிருந்து நாம் உபயோகித்து வந்த சிறுதானியங்கள் தற்போது அழிந்து வருகிறது. பண்டையகால முறைகள் அனைத்தையும் நாம் தொலைத்து வருகிறோம். அதனால் நம்முடைய ஆரோக்கியம் தான் பாதிக்கிறது. இதை எங்கள் குழந்தைகள் மற்றும் மாணவர்களிடையே வெகுவாக பார்த்துவருகிறோம். கோரோனாவுக்கு பின் உலகில் உள்ள மனிதர்களது ஆரோக்கியமும் ஆயுளும் குறைந்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். 30 40 வயதுகளிலேயே ஏகப்பட்ட உடல் தொல்லைகள் வருகிறது.
நாம் இதை கொண்டாட வேண்டும் என முடிவெடுத்து, இந்த சமூகத்திற்கு இதை எப்படி கொண்டு செல்லப்போகிறோம் என யோசிக்கையில், உதவிப் பேராசிரியர் சர்வலிங்கம் ICSR இடம் விண்ணப்பித்தார். எங்கள் மாணவர்கள் நாங்கள் நினைத்ததை விட 100% வெற்றிகரமாக செய்து காண்பித்தார்கள்” என்றார்.