தமிழ்நாடு

நாதுராமின் பரபரப்பு வாக்குமூலம்: சேலை முதல் நகை திருட்டு வரை!

நாதுராமின் பரபரப்பு வாக்குமூலம்: சேலை முதல் நகை திருட்டு வரை!

webteam

கொள்ளையன் நாதுராம் போலீஸாரின் விசாரணையில் தனது திருட்டு வரலாற்றை கூறியுள்ளான்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொளத்தூரில் உள்ள முகேஷ்குமார் என்பவரின் நகைக் கடையில் மேற்கூரையை துளையிட்டு மூன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த நாதுராம், அவரது கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, பக்தாராம் ஆகியோரை கைது செய்ய, ராஜஸ்தானில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஆய்வாளர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட நாதுராம் உட்பட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ராஜமங்கலம் போலீஸார், அவர்களை 10 நாள் காவலில் வைத்து விசாரித்து வந்தனர். இதில் 6 நாட்களிலேயே விசாரணையை முடித்த போலீஸாரிடம், நாதுராம் தனது திருட்டு வரலாறு முழுவதையும் கூறியுள்ளார். நாதுராம் அளித்த வாக்குமூலத்தை போலீசார் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

அதன்படி 12 வயது சிறுவனாக இருந்த போதே நாதுராம் திருடத் தொடங்கியுள்ளார். முதன் முதலாக அவர் மீது குஜராத், சூரத்தில் சேலை திருடியதாக ஒரு போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அங்கேயே ஒரு அடிதடி வழக்கில் சிக்கி சிறை சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வழிப்பறி போன்ற திருட்டுக்களில் அவர் ஈடுபட்டுள்ளார். பின்னர் நகைக்கடைகளில் கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இவரது கூட்டாளியான பக்தாராம்தான் கொள்ளையில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதில் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். 

ராஜஸ்தானைச் சேர்ந்தவர்களின் கடைகளில் திருடுவதை வழக்கமாக கொண்டுடிருந்த நாதுராம், தனது கூட்டாளி பக்தாராமை வைத்து ராஜஸ்தானில் தனது ஊரில் பெரும் பணக்காரர்களாக உள்ள நபர்கள் பற்றிய பட்டியலை தயாரித்துள்ளார். பின்னர் அவர்கள் எந்த இடத்தில் என்ன தொழில் செய்கிறார்கள் என்பதை பக்தாராம் நோட்டமிட்டு கூற, நாதுராம் அங்கு சென்று கொள்ளையடித்துள்ளார். 

இதே பாணியில்தான் கொளத்துார் முகேஷ்குமார் கடையிலும் மாஸ்டர் பிளான் போட்டு, அவரது கடைக்கு மேல் பகுதியை வாடகைக்கு எடுத்துள்ளனர். பின்னர் மேற்கூரையில் சத்தம் வராத அளவுக்கு ஓட்டை போட்டு அதனுள் ஒல்லியான உருவம் கொண்ட தினேஷ் சவுத்ரியை உள்ளே இறக்கி கொள்ளை அடித்துள்ளனர். 

ராஜஸ்தான் பணக்காரர்கள் தங்கியிருக்கும் இடத்தை வேவு பார்க்க, சென்னை மட்டுமின்றி இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்களை வைத்து கொள்ள சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் நாதுராம். ராஜஸ்தானில் போலீஸிடம் பிடிபட்டால், அவர்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள அங்கு தான் சார்ந்துள்ள சமூகம் ரீதியான அரசியல் தலைவர்களிடம் நாதுராம் நெருங்கிய நட்பு வைத்து வந்துள்ளார்.