தமிழ்நாடு

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்

webteam

அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். இதனை தவறவிட்டால் காலம் நம்மை மன்னிக்காது என்று புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியரும், வி.கே.சசிகலாவின் கணவருமான ம.நடராசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ம.நடராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரட்டை இலை சின்னம் எங்களுக்கே சொந்தம் என ஒரு தரப்பினரும், ஆளும் அதிமுகவும் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்தது கோடிக்கணக்கான தொண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெயலலிதாதான் எல்லாம் என ஒடுங்கியிருந்தவர்கள் அவரது மறைவுக்குப் பிறகு சீறிப்பாய்வது, ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசுவது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இரண்டு அணிகளும் ஒன்று சேருங்கள் என பிரதமரே சொல்லும் அளவுக்கு அதிமுகவின் உள்கட்சி சண்டை உலகுக்கே தெரிந்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும் என ஒரு கோடிக்கும் அதிகமான அதிமுக தொண்டர்கள் தினமும் தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த சூழலில் ஜெயலலிதா விட்டுச் சென்ற கட்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிற பொறுப்பும், கடமையும் நமக்கு உள்ளது. இரு அணிகளாகப் பிரிந்து, சகோதரர்கள் என்பதை மறந்து கண்டனக் குரல்கள் எழுப்புவதை யாரும் விரும்பவில்லை. உங்கள் வீட்டுக்கு வந்தால் நீ என்ன தருவாய்?, எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருவாய்? என ஒருங்கிணைப்பாளர்கள் பேசுவது முரண்பாடாக உள்ளது. எனவே, தங்களுக்குள் உள்ள மனவேறுபாட்டை, ஈகோவை மறந்து நலம் விரும்பிகள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் விரும்புவது போல ஒன்று சேர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மீதமுள்ள 4 ஆண்டுகளுக்கு ஆட்சி தொய்வின்றி தொடர பாடுபட வேண்டும். அதிமுக ஒன்றுபட வேண்டும். இது காலத்தின் கட்டாயம். இதனை தவறவிட்டால் காலம் நம்மை மன்னிக்காது” என்று ம.நடராஜன் கூறியுள்ளார்.