தூத்துக்குடியில் தங்குவதற்கு வீடின்றி கடந்த 20 ஆண்டுகளாக நரிக்குறவர் இன மக்கள் தவித்து வருகின்றனர். நீண்ட காலமாக தூத்துக்குடியில் வசிக்கும் தங்களுக்கு அடையாளச் சான்றுடன் வீடு கட்டித் தர வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்த நரிக்குறவர்கள் கடைசியாக புதிய பேருந்து நிலையம் அருகே ஒதுக்கப்பட்டுள்ளனர். இங்கே தற்காலிகக் கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் இந்த மக்கள், மழைக் காலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், அரசு அடையாள அட்டைகள் இல்லாததால், கல்வி, ரேஷன் பொருட்கள் என அனைத்தும் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இந்த நிலை மாற, அரசு தங்களுக்கு சொந்த வீடு கட்டித் தர வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற அடையாளச் சான்று அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
நரிக்குறவர்களுக்காக வசவபுரம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு மனைகளை வழங்கிய அரசு, பசுமை வீடுகள் அல்லது இந்திராகாந்தி நினைவு திட்டத்தின்கீழ் குடியிருப்புகள் வழங்கப்படுமென உறுதியளித்தது. ஆனால், இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படாததால், இவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர். நரிக்குறவர்களின் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷிடம் கேட்டபோது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.