Former CM Narayanasamy pt desk
தமிழ்நாடு

“நடிகர்கள் கட்சி தொடங்கிவிட்டு காணாமல் போய்விட்டார்கள்” - விஜய் குறித்து நாராயணசாமி கருத்து

“தமிழகம் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடிகர்கள் கட்சி தொடங்கிவிட்டு காணாமல் போய்விட்டார்கள்” என்று நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்

இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அங்கு அவர் மூலவர், உற்சவர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்தார்.

நாராயணசாமி சுவாமி தரிசனம்

அதைத் தொடர்ந்து தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது... “பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். புதுச்சேரியில் நான் முதல்வராக இருந்தபோது, ஆளுநர் கிரண்பேடி என்னை பணி செய்ய விடாமல் தடுத்தார். அதே போல் தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வரை பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார்.

விஜய்க்கு வாழ்த்துகள்...

“நடிகரும் நண்பருமான விஜய், புதிதாக கட்சி தொடங்கி, கொடி அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். இங்கே கவனிக்க வேண்டியதாக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தடம் மாறி போகிறார் என்பது உள்ளது. பாஜக ரங்கசாமியை கைவிட்டு விட்டது. ஆகவே விஜய்யோடு சேர்ந்தாவது கரை சேர்ந்து விடலாம் என ரங்கசாமி நினைக்கிறார். ஆக, ரங்கசாமி தற்போது கட்சி மாறுகிற வேலையை பார்க்கிறார். அதனால்தான் விஜய்யின் மாநாட்டில் அவர் கலந்துகொள்வார் என்பது போன்ற சில செய்திகள் வருகின்றன.

vijay

நடிகர்கள் கட்சி தொடங்குவது குறித்து...

தமிழகத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் சில நடிகர்கள் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். தமிழகத்திலேயும் விஜயகாந்த் போன்றோர் கட்சி ஆரம்பித்தனர். ஆனால் கவனிக்க வேண்டியது என்னவெனில், தமிழகத்தில் எம்.ஜி.ஆரை தவிர வேறு யாரும் கட்சி ஆரம்பித்து நிலைக்கவில்லை. சில காலம் சில சட்டமன்ற உறுப்பினர்கள் வந்த பிறகு காணாமல் போய் விடுவார்கள். ஆகவே நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதால் எந்த பிரச்னையும் எங்களுக்கு ஏற்படப் போவதில்லை. மக்கள் நடிகர்களை பார்த்து ஓட்டு போட மாட்டார்கள்” என்றார்.