தமிழ்நாடு

அரசியலே வேண்டாம்: நாஞ்சில் சம்பத்

webteam

பொதுவாழ்வு இனி வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாக அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மதிமுகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய நாஞ்சில் சம்பத், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு புதிய இனோவா கார் ஒன்றினை ஜெயலலிதா பரிசளித்திருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா அளித்த காரினை அதிமுக தலைமை அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்தார். இதையடுத்து பல்வேறு ஊகங்கள் எழுந்தன. இது தொடர்பாக புதியதலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்த நாஞ்சில் சம்பத், இனி பொதுவாழ்வு வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா அளித்த காரினை அதிமுகவிடமே திரும்ப அளித்து விட்டதாகவும் அவர் கூறினார். திமுகவில் சேர தான் எந்தக் கதவையும் தட்டவில்லை எனவும், அந்தக் கட்சியில் இணையுமாறு நண்பர்களிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் கூறினார். அரசியலே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டதால் திமுகவிலும் தாம் சேரப் போவதில்லை என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.