திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவன் ஒருவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியதில் 17 வயது மாணவனும் அவரது 13 வயது தங்கையும் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், திரைப் பிரலங்கள், பல்வேறு கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்திற்கு கண்டனத்தையும் பாதிக்கப்பட்ட மாணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தங்களது ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவருக்கு வன்கொடுமை தீருதவி தடுப்பு சட்டத்தின் கீழ் தீருதவி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் சகோதரியை தொடர்பு கொண்டு புதிய தலைமுறை சார்பாக பேசினோம். அவர் பேசுகையில், “நைட்டு 10 மணிக்கு 3 பேரு வந்தாங்க. எங்க சமூக பேரை குறிப்பிட்டு ‘நீங்க இந்த சமூகம்தானே. நீங்க எப்படி என் மேல கம்ப்ளைண்ட் பண்ணலாம்’னு சொல்லி ஏசினாங்க (திட்டினர்). அம்மாவையும் கெட்ட வார்த்தை சொல்லி ஏசுனாங்க. அப்பறம் ஒரே அருவா வச்சி மூணு பேரும் மாத்தி மாத்தி வெட்டுனாங்க. அப்போ அங்க ஒருத்தர், என் அண்ணனின் கழுத்தை வெட்டணும்னு இன்னொருத்தரை சொன்னார். அப்போ நான் அந்த அரிவாளை பிடிச்சுட்டேன். அப்போ என் கையில் வெட்டுப்பட்டது. நான் கத்தினதும் பக்கத்து வீட்ல இருந்தவங்க, ஓடிவந்துட்டாங்க.
எங்களுக்கு பாதுகாப்பு வேணும். ஊருக்கும் பாதுகாப்பு வேண்டும். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எங்களுக்கு பயமா இருக்கு. ஊருக்கும் பாதுகாப்பு வேணும். எங்களுக்கும் பாதுகாப்பு வேணும்” என்றார். பாதுகாப்பு வேணுமென்ற அந்த குழந்தையின் குரல், இன்னும் எங்கள் காதுகளுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அரசு தற்போது இவ்விவகாரத்தில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.