சின்னதுரை  புதிய தலைமுறை
தமிழ்நாடு

நாங்குநேரி சாதி கொடுமை | ‘கல்விக்கு முன் அனைவரும் சமம்’ - பாதிக்கப்பட்ட மாணவர் +2 தேர்வில் சாதனை!

நாங்குநேரியில் சாதி ஆதிக்க தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை +2 தேர்வில் 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் கடந்த வருடம் 17 வயது பள்ளி மாணவர் ஒருவர்மீது, சக மாணவர்கள் வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அதில் 17 வயது மாணவனும் அவரது 13 வயது தங்கையும் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்பவம் கொடுத்த அதிர்ச்சியில் அங்கிருந்த ஒரு முதியவர் இறந்திருக்கிறார். சாதி ரீதியாலான இந்த தாக்குதல் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இவ்விவகாரத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்களின் மேற்படிப்பு செலவை தான் ஒரு அண்ணனாக இருந்து ஏற்பதாக தெரிவித்திருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

இந்நிலையில், நாங்குநேரியில் சாதி ஆதிக்க தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை நடந்து முடிந்த +2 தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இன்று காலை 9.30 மணி அளவில், +2 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், நாங்குநேரியில் சாதி வெறி தாக்குதலுக்கு ஆளான மாணவன் சின்னதுரை 600க்கு 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

மாணவர் சின்னதுரையின் +2 மதிப்பெண்கள்

இதன்படி, தமிழ் - 71, ஆங்கிலம் - 93, பொருளாதாரம் - 42, வணிகவியல் - 84, கணக்குப்பதிவியல் -85, கணினி பயன்பாடு - 94 என மொத்தம் 469 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார் மாணவர் சின்னதுரை.

இதன்மூலம் கல்வியின் முன் அனைவரும் சமம், கல்விக்கு எந்த சாதிய தகுதியும் தேவையில்லை என்று மெய்ப்பித்து காட்டியுள்ளார் சின்னதுரை. தடைகளை தகர்த்தெரிந்து வாழ்வில் வெற்றியடைந்துள்ள சின்னதுரைக்கு அனைவரும் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.