பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக சென்னையில் நாளை மறுநாள் 21-ம் தேதி, ‘நம்ம ஊரு திருவிழா’ நடைபெறுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் 'நம்ம ஊரு திருவிழா' குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதிவேந்தன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து, திங்கள் மாலை 6 மணியளவில் ‘நம்ம ஊரு திருவிழா’ நடத்தவுள்ளது.
பல்வேறு நாட்டுப்புற கலைகள் அடங்கிய நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக சென்னை தீவுத்திடலில் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் நாட்டுப்புற கலைகள் மீட்டெடுக்கும் விதமாக இந்த திருவிழா நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டுப்புற கலைகளுக்கு எதுவும் செய்யாத நிலையில் நாட்டுப்புற கலைகள் தற்போது நடைபெறுகிறது.
டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொள்கின்றனர். கலை வடிவங்களின் சங்கமமாக இந்த திருவிழா நடைபெறுகிறது. சமூக வலைத்தளங்கள், சென்னையில் உள்ள முக்கிய இடங்களில், இந்த திருவிழா எல்.இ.டி திருவிழா மூலம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
ஒரு நாள் மட்டும் சென்னையில் நடைபெறும், மற்ற இடங்களில் நடைபெறும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். பாரம்பரிய கலைகளை மீட்டெடுப்பதே இந்த திருவிழாவின் நோக்கம். சென்னை சங்கமம் நிழச்சியின் மறுவடிவம்தான் நம்ம ஊரு திருவிழா.
ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா நாட்களில் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக வரும் பொங்கல் தினத்திற்கு பதிலாக தற்போது நடைபெறுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் சுற்றுலா பண்பாடு துறை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.