தமிழ்நாடு

“காப்பாத்துங்க... கத்திய மாணவர்கள்” - பட்டப்பகலில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்!

“காப்பாத்துங்க... கத்திய மாணவர்கள்” - பட்டப்பகலில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்!

webteam

ராசிபுரம் அருகே பள்ளிக்குச் சென்ற மாணவர்களை 5 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி கடத்த முயற்சித்து உள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குச்சிகாடு அரசு உதவி பெறும் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று மாணவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது, ராஜ் முருகன் (6) 1ம் வகுப்பு, மகிழிஷ்வரன் (12) 8ம் வகுப்பு, கிரிமுருகன் (12) 7ம் வகுப்பு, யுவன் பாரதி (12) 7ம் வகுப்பு, தருண் (12) 7ம் வகுப்பு ஆகியோர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஆம்னி வேனில் வந்து மாணவர்கள் மறித்துள்ளது.

அத்துடன் கத்தியைக் காட்டி மாணவர்களை கடத்த முயற்சித்துள்ளது. அப்போது மாணவர்கள் “காப்பாத்துங்க” என கூச்சலிட, அங்கு மக்கள் திரண்டுள்ளனர். இதையடுத்து அந்தக் கடத்தல் கும்பல் பயந்துபோய் தப்பி ஓடியுள்ளனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அந்த இடமே பரபரப்பானது. இதையடுத்து மாணவர்களுக்கு ஆறுதல் கூறிய மக்கள், பயப்பட வேண்டாம் எனக்கூறினர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதற்குள் சம்பவ இடத்தில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கடத்தல்காரர்களை பிடிக்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. காவல்துறையினர் கடத்தல்காரர்களை பிடிப்பதாக உறுதியளித்துள்ளனர். இருப்பினும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவது அச்சமாக உள்ளது என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.