நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து முட்டை விலை சரிவை கண்டுள்ளது. ரம்ஜான் நோன்பையொட்டி விற்பனை சரிவால் ஒரு வாரத்தில் 70 காசுகள் விலை குறைக்கப்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளில் இருந்து 30 காசுகள் குறைத்து 3 ரூபாய் 80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 14ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், 16-ஆம் தேதி 20 காசுகளும், 21-ஆம் தேதி 20 காசுகளும் குறைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரே நாளில் 30 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 80 காசுகளாக விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து முட்டை விலை ஒரு வாரத்தில் 70 காசுகள் விலை குறைந்துள்ளது குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது, ரம்ஜான் நோன்பையொட்டி அசைவம், முட்டை உண்பது நாடு முழுவதும் குறைந்த நிலையில் ஹைதராபாத், பர்வாலா உள்ளிட்ட வட மண்டலங்களில் முட்டை விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
தமிழகம், கேரளாவிலும் தொடர்ந்து விற்பனை சரிந்து அதிகளவு தேக்கம் அடைந்ததால், விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலையை தொடர்ந்து குறைத்து வருவதாகவும், ரம்ஜான் பண்டிகைக்குப் பின்னரே விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.