அரசை எதிர்த்து கருத்து கூறும் நடிகர் கமல் தனக்குப் பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும், அரசியல் கட்சிகளும் இருப்பதாக தப்புக் கணக்கு போட்டால் அதன் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நமது எம்ஜிஆர் நாளிதழில் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
திரிசங்கு சொர்க்கத்தில் நடிகர் கமல் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள செய்தியில், அரசை எதிர்த்து ஆர்வக் கோளாறு காரணமாக கமல்ஹாசன் கருத்து தெரிவிப்பதை திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரிப்பதால், ஒட்டுமொத்த தமிழகமும் தனக்குப் பின்னால் இருப்பதாக கமல் கருதுவதாக கூறப்பட்டுள்ளது. உணர்ச்சிவசப்பட்டு அவர் செய்கின்ற செயல்களும், சொல்கின்ற கருத்துகளும் இப்போதைக்கு விளம்பரத்தை ஏற்படுத்தும் என்றாலும், பின்னால் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது கமலுக்கு புரியவில்லை என்றும் நமது எம்ஜிஆர் செய்தியில் கூறப்பட்டுள்ளது. கமலுக்காக ஆதரவுக் குரல் கொடுக்கும் கட்சிகள் காலப்போக்கில் கைகழுவி விட்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்கள் என்பதை கமல்ஹாசன் உணர வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.