தமிழ்நாடு

நக்கீரன் ஊழியர்கள் முன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

நக்கீரன் ஊழியர்கள் முன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

webteam

ஆளுநர் மாளிகை அளித்த புகார் தொடர்பாக நக்கீரன் இதழின் ஊழியர்கள் 35 பேர் முன் ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கவுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக்கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு, அடையாறு சரக போலீஸார் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்த, தமிழக அரசியல் தலைவர்களான மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்டவர்கள் கோபாலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து கோபால் மீது 124 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. மாலை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கோபால் ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 124 பிரிவு வழக்கை தள்ளுபடி செய்தது. அத்துடன் அன்று மாலையே கோபாலை விடுவித்தது.

இந்த நிலையில் நக்கீரன் இணை ஆசிரியர் லெனின் உள்ளிட்ட 35 நக்கீரன் ஊழியர்கள் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். அதில் ஆளுநர் அளித்த புகாரின் பேரில் தாங்கள் கைது செய்யப்படக்கூடும் என அஞ்சுவதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த மனு நாளை நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.