நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இந்து முன்னணி தலைவராக பொறுப்பு வகித்தவர். இவரின் மனைவி தங்கம். கடந்த 1995ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி, இவர்கள் வீட்டிற்கு வந்த பார்சலை முத்துகிருஷ்ணன் வீட்டில் இல்லாததால், அவரின் மனைவி வாங்கிப் பிரித்தார். அப்போது, பார்சலில் இருந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடித்ததில், அவர் உயிரிழந்தார். உயிரிழந்த 28 ஆம் ஆண்டு நினைவஞ்சலி பொதுகூட்டம் நாகூரில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அர்ஜுன் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒன்று கூடினர். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அர்ஜுன் சம்பத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவும் முயற்சி செய்தனர். இதனால் நாகூரில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து ஏடிஎஸ்பி சுகுமாறன் தலைமையில் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக இந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் ஆயுதப்படை போலீசார் உடன் நாகூரில் கவச உடைய அணிந்து கொடி அணிவகுப்பு நடத்தினார்.
மேலும் அங்கிருந்தவர்களை களைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவம் குறித்து இருதரப்பினரும் புகார் அளித்தனர். புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், நாகூரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை வருவதால் நாகூர் நகரம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.